Thursday, June 10, 2010

தேனொலிக்கும் வானொலி


தேனொலிக்கும் வானொலி
- சிவப்ரியா
First Published : 28 May 2010 02:18:35 AM IST : DINAMANI Tamil Paper

Last Updated :

"ஆல் இந்தியா ரேடியோ' - சென்னை வானொலி நிலையம் என்கிற இந்தக் காலை வணக்கம் இசைப் பிரியர்களுக்கு வரப்பிரசாதம்.

இம்மாதம் 24-ஆம் தேதி, திங்கள்கிழமை காலை வானொலியில் 8-45 மணிக்கு சென்னை "பி' ஸ்டேஷனில் ஒலிபரப்பான ஒரு நிகழ்ச்சி நம்மை ஆன்மிக உலகத்திற்கே எடுத்துச் சென்று ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தியது.

1968 - 69-ல் பதிவு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி வானொலியின் தரத்திற்கே ஒரு எடுத்துக்காட்டாக இருந்தது. அன்றைக்கு ஒலிபரப்பானது ஒரு அருமையான இசைச் சித்திரம். அது மாபெரும் ஞானியாக விளங்கிய ஸதாசிவ ப்ரம்மேந்திரர் பற்றியும் அவர் இயற்றிய பாடல்களைப் பற்றியுமான இசைச் சித்திரம் அது.

இந்த இசைச் சித்திரம் மிகவும் நேர்த்தியாக அமைத்த ஒன்றாக இருந்தது. இரண்டு பேர் குரு - சிஷ்யன் என்கிற பாத்திரத்தில் கேள்வி - பதில் மூலம் பல ருசிகரமான சம்பவங்களையும், விஷயங்களையும் நமக்கு அளித்தார்கள். ஸதாசிவ ப்ரம்மேந்திரரின் வாழ்க்கை வரலாறு, அவர் சன்யாஸம் வாங்கிய சம்பவம், பரம மௌனி ஆன கட்டம் என்று பலவிதமான தகவல்கள் நமக்கு அளிக்கப்பட்டது.

ஸதாசிவர் பரம அத்வைதி. நிர்குணம், நிராகாரம், ஸ்ர்வம் ப்ரம மயம் என்று உச்சகட்ட அத்வைத விசாரங்கள் கொண்டவர். இருப்பினும் அந்த நிலையை அடைவதற்கு ஸகுண வடிவமே மார்க்கம் என்கிற வகையில் ராமர், கிருஷ்ணர் லீலைகளைப் பற்றி பலவித பாடல்கள் அமைத்துள்ளார் என்று தெரியவந்தது.

அவர் இயற்றிய பாடல்களுக்கு இசை வடிவம் கொடுத்து மெட்டு அமைத்துள்ளார் மறைந்த மூத்த கலைஞர் செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர். அவ்வண்ணமே அப்பாடல்களைப் பாடி நடுவில் ஸ்லோகங்களை விருத்தமாகப் பாடி, நடுநடுவே கேள்வி பதில் மூலம் விஷயங்களைத் தெளிவுபடுத்தி, நேயர்களுக்கு ஒரு நல்ல விஷய விருந்தைச் சமைத்திருந்தார்கள். குகன் என்பவரால் இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டு எஸ்.ராஜம் தலைமையில் ஆர். வேதவல்லி, எஸ்.பிரேமா, எஸ்.ஐயர் ஆகியோர் உடன் பாடின இந்நிகழ்ச்சி ஓர் அற்புதமான பொக்கிஷம்.

துல்லியமான ரிக்கார்டிங், அருமையான பாட்டு, தெளிவான கேள்வி பதில்கள் என்று ஒவ்வொரு அம்சமும் மிகவும் கோர்வையாகச் சித்தரித்து அமைத்திருந்தார்கள். வானொலியின் இசை சேவையை நினைக்கப் பெருமையாக இருந்தது.

ஆல் இந்தியா ரேடியோவின் உதவியால் எத்துணை வித்வான்களின் கச்சேரிகள், இசை உரைகள், இசை சொற்பொழிவு, ஹரிகதா காலúக்ஷபம், வாத்திய விருந்தா என்று பலவகையான நிகழ்ச்சிகள் நம் செவிக்கு உணவாகக் கிட்டியிருக்கிறது? வாத்திய விருந்தா போன்ற ஸங்கீத அமைப்பில், பலவிதமான இசை கருவிகள், கலைஞர்கள் ஒன்று சேர்ந்து, ஒரே ஸ்ருதியில் பாட்டுகளை வாசித்து, வண்ணமயமான இசைக்கோலம் தீட்டி "வாத்திய விருந்தோ' என்று வியக்கும்படி அவரவர்கள் தங்கள் வித்வத்தைக் கூட்டிப் பங்கிட்டு கொண்டு நேயர்களை மகிழ்விக்கிறார்கள்.

ஆல் இந்தியா ரேடியோவில் நிறைய பெரிய வித்வான்கள் பணியாற்றியிருக்கிறார்கள், பணியாற்றி வருகிறார்கள். ரேடியோவில் பாடி பல பேர் பிரபலமாகி இருக்கிறார்கள்.

அதேபோல தூர்தர்ஷனிலும் பலதரப்பட்ட சாஸ்த்ரிய சம்பிரதாயமான நிகழ்ச்சிகள் பதிவு செய்து ஒளிபரப்புகிறார்கள். தூர்தர்ஷனில் பல நாள்களுக்கு முன்னால் "ஸ்வர ராக ஸீதா' என்று ஒரு தொடர் நிகழ்ச்சி மூலம் வெவ்வேறு ராகங்களின், பாட்டின் பரிணாமங்களை விளக்கினர். சினிமா - கர்நாடக இசை இதன் ஒற்றுமை - வேற்றுமைகளைக் காண்பிக்கும் வகையில் அமைந்த இந்த நிகழ்ச்சிக்கு நேயர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிட்டியது. கர்நாடக ஸங்கீத மகான்களின் வாழ்க்கை வரலாறு, ரஸிகப்பிரியா என்று ஒரு நிகழ்ச்சி பலவகை கச்சேரிகள், திருவையாறு தியாகராஜ ஆராதனை நேரடி ஒளிபரப்பு என்று ஏராளமான நிகழ்ச்சிகளைத் தூர்தர்ஷன் பதிவு செய்து காண்பித்து இருக்கிறது.

தூர்தர்ஷன் பொதிகையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி. இதில் நமது கர்நாடக சங்கீதத்தில் இருக்கும் 72 மேள கர்த்தா ராகங்களைப் பற்றின சுவையான நுணுக்கங்களை, அந்த ராகங்களில் உள்ள கிருதிகளை பாடிக் காண்பித்து, ஆறு முன்னணி, மூத்த கலைஞர்கள் ஆளுக்குப் பன்னிரண்டு ராகம் என்ற முறையில் வகுத்துக் கொண்டு ஒரு மாபெரும் இசை உரை நிகழ்த்தினர்.

வாராவாரம் வெள்ளிக்கிழமை அன்று இந்நிகழ்ச்சியைக் காண்பித்து இதனின் மறு ஒலிபரப்பை திங்களன்று காண்பித்து, எல்லோரும் கேட்டு, பார்த்து, தெரிந்து கொள்ளும் அளவிற்கு நமது வீட்டிற்கே கொண்டு வந்து சேர்த்தார்கள்.

வானொலி நிலையத்தில் ஒரு பிரம்மாண்டமான அரங்கம் இருக்கிறது. விஸ்தாரமான மேடை, நல்ல மைக் என்று அமைத்து கச்சேரிகளும் ரிக்கார்டிங்களும் செய்கிறார்கள். இது போன்ற நிகழ்ச்சிகளை நேயர்கள் நேரிலும் கண்டு களிக்கலாம்.

இவ்வளவு பொக்கிஷங்களை நிறைத்து வைத்து இருக்கும் இந்த இரண்டு நிறுவனங்களுமே நமது நாட்டின் கலா சிகரங்கள். நமது கலாசாரத்திற்குப் பெருமை, ஏற்றம் சேர்க்கக்கூடிய நிறுவனங்கள்.

விளம்பரங்களையே நிகழ்ச்சியாக்கும் தனியார் சேனலைப்போல இல்லாமல், நிகழ்ச்சிகளை சீர் கெடாமல் தொடர்ந்து ஒலிபரப்பும் விதம் மிகச் சிறந்தது.

இருப்பினும், ஒரு உத்வேகத்துடன் செயல்பட்டு நிர்வாக மாற்றங்கள் செய்து தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்து, நிர்வாகத்தை செம்மைப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

பழைய ரிகார்டிங் எல்லாவற்றையும் "டிஜிடல்' செய்து மறு ஒலிபரப்பு செய்து, குறுந்தகடு வடிவத்தில் விற்பனையும் செய்ய முயற்சித்தால் நல்ல விஷயங்கள் ரசிகர்களுக்குக் கூடுதலாகப் போய் சேரும்.

No comments:

Post a Comment