Saturday, June 26, 2010

குரல் ஆரோக்கியம் நம் கையில்!

சிவப்பிரியா கிருஷ்ணன்
An article by Sivapriya Krishnan : First Published in Dinamani : 25 Jun 2010 02:44:00 AM IST


குரல் வளம், கடவுள் கொடுத்த வரம். ஒவ்வொருவரின் குரலும் அவர் அவரின் தனித்துவத்தை எடுத்து காட்டுகிறது. குரலை வளைய வைத்து தம் வசப்படுத்தும் திறமையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். சரியான பயிற்சியின் மூலம் அப்படி வளர்த்துக்கொள்ள முடியும்'' என்கிறார் டாக்டர் எஸ். ஏ. கே துர்கா.

துர்கா 1965-லிருந்து குரலை பற்றின ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். அப்போது, வீணை தனம்மாள் பரம்பரையிலிருந்து வந்த மூத்த புல்லாங்குழல் கலைஞர் டி. விஸ்வநாதன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ரீடர் மற்றும் துறைத் தலைவராகப் பணியாற்றி கொண்டிருந்தார். கர்நாடக இசைக்குத் தகுந்தவாறு குரலை எப்படி தயார் செய்யலாம் என்று ஆராய்ச்சி செய்யும்படி இவரை ஊக்குவித்தார். இதை ஒரு முழு ஈடுபாட்டுடன் எடுத்துக் கொண்டு, துர்காவும் லாரிங்காலஜி என்னும் துறையில் போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ பெற்று, அயல் நாட்டுக்கும் சென்று இன இசையியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.

டாக்டர் துர்கா ஒரு சிறந்த பாடகி. மகராஜபுரம் விஸ்வநாத அய்யரின் சிஷ்யை. கர்நாடக சங்கீதத்தில் குரலை எப்படி கையாளுகிறார்கள் என்று நன்கு அறிந்தவர். இயற்கைபடி குரலுக்கு மூன்று ஸ்தாயியில் பாடும் திறமை கிடையாது. அதை சாதகம் செய்து வர வைக்கிறோம் என்கிறார். 92 முதல் 95 சதவீத பாடகர்கள் அதை சாதகத்தினால் வரவைக்கிறார்களாம். குரல்வளம் சம்பந்தமான சி.டி. தயாரிப்பில் இருக்கும் துர்கா, அவர் மேற்கொண்டிருக்கும் ஆய்வு சம்பந்தமாக பல நல்ல நுணுக்கமான விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். "

"நம் சங்கீதத்தில் குரலை வித விதமாக பிரயோகப்படுத்த வேண்டும். நாட்டுப்புற பாடலை போல் அல்லாமல் சாஸ்திரிய சங்கீதத்திற்குக் குரலில் ரேன்ஜ் என்னும், வெவ்வேறு ஸ்தாயியில் பாடும் திறமை தேவைப்படுகிறது. இதனால் சாதகம் செய்யும்முறை சரியாக இருக்க வேண்டும். அநாவசியமாக கத்தியோ அல்லது குறைந்த ஸ்ருதியிலும், வெவ்வேறு ஸ்ருதியிலும் பாடினாலும் குரல் கெட்டுவிடும். அவரவர் குரலின் தன்மைக்கு ஏற்ற ஸ்ருதியில் பாட வேண்டும்'' என்கிறார். "

"குரலைப் பாட வைப்பது, நம் மூச்சு விடும் தினுசில் இருக்கிறது. சீக்கிரமாக மூச்சை உள் இழுப்பது, அளவாக வெளியேவிடுவது என்று முறையாக செய்தால்தான் பாட்டு பாட வரும். அகாரமாக பாடுவதற்கு மூச்சை நன்றாக கண்ட்ரோல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் குரலில் நடுக்கம் தெரியும். நமது குரல் நம் மனதுடனும், மூளையுடனும் இணைந்து இருக்கிறது.

நன்றாக பாட வேண்டும் என்கிற உற்சாகத்தையும் பாட முடியும் என்கிற நம்பிக்கையையும் வளர்த்து கொண்டால் தான், மேலும் நம் குரலை சாதகத்தினால் செம்மைப் படுத்த முடியும். பயம் தெளிந்தால் நடுக்கம் தெளியும், குரலும் நன்றாக ஒத்து உழைக்கும்.

ப்ரணாயாமம், சரியான, மிதமான உணவு என்று நமக்கே உரிய கட்டுப்பாட்டுக்குள் இருந்தால், குரலை நன்றாகப் பாதுகாக்க முடியும். கச்சேரி மேடையில் பாடும் முறை, மைக்கை கையாளும் விதம், இதெல்லாம், பாடகர் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.

அக்காலத்தில் குருகுல வாசத்தில் இருந்து பல விஷயங்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இருந்தது. இப்பொழுது, அந்த நிலை இல்லை. மேலும் பல விதமான சூழ்நிலைகள் மாறி வரும் இக்காலத்தில் இதை விஞ்ஞானபூர்வமாக எடுத்து உரைக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது'' என்கிறார் டாக்டர் துர்கா.

பல மாணவர்களுக்கு இதை ஒரு வகுப்பாக நடத்தி வருகிறார். குரலை பாதுகாத்து, குரலை சரியாகவும், நேர்த்தியாகவும் செம்மைப்படுத்தும் விதிமுறைகளை இந்த வகுப்பில் எடுத்துக் கூறினார் அவர். இன்னும் நிறைய பேர் பயன் அடையும் வகையில், இதை சிடி வடிவத்தில், ஸ்வாதி ஸôஃப்ட் சொல்யூஷன் வெளியிட்டிருக்கிறது.

ஒரு பாடகருக்கு குரல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியம், அதை எப்படி பாதுகாப்பது என்பதை நேர்த்தியாக எடுத்து கூறும் டாக்டர் துர்காவி இப்பணி நமது இசையுலக இளைய தலைமுறைக்கு அவர் செய்யும் மாபெரும் சேவை. அதை பயன் படுத்திக் கொள்வது பாடுபவர்களிடம்தான் இருக்கிறது.

No comments:

Post a Comment