Thursday, June 10, 2010

இது நல்ல தருணம்


இது நல்ல தருணம்
- சிவபிரியா கிருஷ்ணன்

First Published : 11 Jun 2010 02:51:28 AM IST : DINAMANI Tamil Paper


தருணம் என்கிற பெயரில் ஒரு குறுந்தகடு ஜுன் 8ஆம் தேதி அன்று சிவகாமி பெத்தாச்சி அரங்கில் வெளியிடப்பட்டது. வழக்கமான குறுந்தகடு வெளியீட்டு விழா போல இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

தருணம் என்கிற இந்த குறுந்தகடில் அப்படி என்னதான் இருக்கிறது?

ஒரு சோற்றுப்பதம் போல தமிழின் ஆகச் சிறந்த சங்க கால, இடைக்கால தமிழ் இலக்கியச் செய்யுள்களுக்கு இதில் இசை வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. தவிர பாசுரங்கள், பதிகங்கள், தமிழ்க் கீர்த்தனைகள் போன்றவற்றைப் பாடல் வடிவத்தில் அமைத்து, பியானோ உடன் கூடிய வாய்ப்பட்டாகத் தொகுத்து வழங்கி இருக்கிறார்கள் பாடகர் சிக்கில் குருசரணும், பியானிஸ்ட் அனில் ஸ்ரீநிவாசனும்.

இதன் முதல் குறுந்தகடை மாநிலங்கவை உறுப்பினர் கனிமொழி வெளியிட, இந்து நாளிதழ் இணை ஆசிரியர் நிர்மலா லக்ஷ்மன் பெற்றுக் கொண்டார். உலக செந்தமிழ் மாநாட்டிற்கு இது ஒரு அழகான முன்னறிவிப்பு என்று சுவையாகவும் சுருக்கமாகவும் புகழ்ந்து பேசினார் கனிமொழி. தமிழ் மொழியை இசையால் அலங்கரிக்கும் இனிய வாய்ப்பைத் தவறவிடவில்லை குருசரணும் அனில் ஸ்ரீனிவாசனும்.

"இந் தக் கச்சேரியை கிராமி விருது பெற்ற மறைந்த சவுண்ட் என்ஜினீயர் ஸ்ரீதர் மற்றும் இசையமைப்பாளர் மகேஷ் அவர்களுக்கு அர்பணிக்கிறோம்' என்று அறிவித்தார்கள். சிடி விற்பனையில் ஒரு பங்கு மகேஷ் நினைவு அறக்கட்டளைக்கு வழங்கப்படும் என்றும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் அகநானூறு, திருப்புகழ், திவ்ய பிரபந்தம் உள்ளிட்ட பாடல்களுக்கு இசையமைத்து, மேடையில் பாடினார்கள். இத்துடன், பாபநாசம் சிவன், உளுந்தூர்பேட்டை ஷண்முகசுந்தரம், ஊத்துக்காடு வேங்கடகவி போன்றோர் இயற்றிய பாடல்களையும் குரலாலும் பியானோவாலும் சிறப்பித்தார்கள்.

ஸ்ரீனி வாசனுக்கும், குருசரணுக்கும் பரஸ்பரம் ஒரு நல்ல இணைப்பு தெரிகிறது. வெகு நாட்கள் கூடவே பாடி, வாசித்துப் பழகிவிட்டதால், அதனால் வரும் இயல்பும், நட்பும், அவர்கள் மத்தியில் தெரிந்தது.

எல்லாமே நன்றாக இருந்தாலும் ஒரு சில விஷயங்கள் மனதை நெருடின.
அரங்கத்தை இருட்டாக்கி, சினிமா தியேட்டர் போல் அமைத்தால்தான், புது இசை முயற்சிகளை ரசிக்க முடியுமா?
மென்மையான, சங்கீதத்திற்கு மென்மையான ஒளி எவ்வளவோ பொருத்தமாக இருந்திருக்கும்? திரையில் காணும் படம் போல் எங்கோ கலைஞர்கள், எங்கோ ரசிகர்கள் என்று ஒரு பிளவை ஏற்படுத்தும் வகையில் இருட்டு ஒரு தடையாகவே அமைந்துவிட்டது.

பாட்டை அறிமுகப்படுத்துகிறேன் என்கிற பெயரில் அகநானூறையும், பாசுரங்களையும், ஆங்கிலத்தில், அதுவும் புரியாத ஒரு நுனி நாக்கு ஆங்கிலத்தில் விளக்கினால் தகுமா? ஒரு முறை தமிழில் எடுத்துரைத்து, பிறகு ஆங்கிலத்தில் விளக்கம் கூறியிருக்கலாமே? முடியாதது ஒன்றும் இல்லை. அனில் ஸ்ரீநிவாசனும்கூட ஆரம்பத்தில் "டாமில்' என்றுதான் சொன்னார். பிறகு திருத்திக் கொண்டார்.

செம்மொழியான தமிழ் மொழி வாழ்ந்து செழிப்பதற்கு அதைச் சிறப்பாக உச்சரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதை ஒரு கொள்கையாக எடுத்துக் கொண்டு செயல்பட இச் செம்மொழி மாநாடுத் தருணத்தில் உறுதி எடுத்துக் கொள்ளலாமே!

3 comments:

  1. யதார்த்தத்தை உள்ளங்கை நெல்லிக்கனி போல் அழகாக சுட்டிக்காட்டும் ஒரு அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

    My Musings

    ReplyDelete
  2. Thanks Saras for that compliment.

    ReplyDelete