I have uploaded my write up that was published in Dinamani, about the play "Flame of the Forest" , that I witnessed last week.
Sivapriya Krishnan
கெளரியின் சபதம்!
by சிவப்பிரியா கிருஷ்ணன்
First Published : 09 Jul 2010 03:15:00 AM IST
கதை படைப்புகளோ, காவியங்களோ நாடக மேடையில் அரங்கேறியதைக் கண்டிருக்கிறோம். எத்தனையோ விதமாக காவிய நாடகங்களை, நாம் கண்டு களித்து இருக்கிறோம். ஆனால் சற்றே வித்தியாசமான விதத்தில் அமைந்திருந்தது "ஃப்ளேம் ஆஃப் த ஃபாரஸ்ட்' என்கிற ஆங்கில நாடகம். இது கெüரி ராம்நாராயண் தயாரிப்பு.
இந்த நாடகம், கல்கியின் "சிவகாமியின் சபதம்' நாவலைப் பின்னணியாகக் கொண்டு, மிகவும் வித்தியாசமான வடிவத்தில் அமைக்கப்பட்டது.
இசை, நாட்டியம், நாடகம் என்ற மூன்று அங்கங்களைக் கோர்த்து வழங்கப்படும் நாடகம்தான் இவரது படைப்பின் தனித்துவம். 2005லிருந்து இயங்கி வரும் இந்த அமைப்பின் மூலம் பல தலைப்பில், இலக்கிய, சரித்திர, அரசியல் சார்ந்த விஷயங்களில் நாடகங்களை வழங்கி இருக்கிறார் இவர்.
புகழ் பெற்ற நாடக குழுவான "த மெட்ராஸ் ப்ளேயர்ஸ்' அவர்களுடன் இணைந்து இந்த நாடகத்தை இரண்டு வருடத்திற்கு முன்னால் அரங்கேற்றினார்கள். இந்த வருடம் கெüரி "ரெட்ரொஸ்பெக்டிவ்' என்ற தலைப்பில், அவர்களின் படைப்பின் பின்னோக்குப் பார்வையாக இந்த நாடகம் வழங்கப்பட்டது.
சிவகாமியின் சபதத்தின் சாராம்சத்தை மிகவும் அழகாக ஆங்கிலத்தில் வடிவமைத்து, அந்தக் கதையில் எழும்பும் பலவிதமான உணர்வுகளான கேள்வி, குழப்பம், கோபம், பரிதாபம், ஆவேசம் என்று ஒவ்வொன்றையும் வசனம், நாட்டியம், இசை மூலம் நேயர்களுக்கு எடுத்து உரைத்திருந்தது பிரமாதமாக இருந்தது.
மகேந்திர பல்லவனின் திறமை, இசை ஞானம், அரசியல் சாதுரியம், இவற்றுடன், அவரின் இயலாமையையும் அவரே உணர்ந்து பரஞ்சோதியிடம் பகிர்ந்து கொள்வது போன்ற காட்சிகள் சிறப்பு. இளமையும் மிடுக்கும் கலந்த சிவகாமி பிறகு கனிந்து மாறுவது, பரஞ்சோதியின் ஞான வளர்ச்சி, புலிகேசியின் கொடூரம், சைவ- சமண மத பேதம், அதனால் வளரும் வாக்குவாதம், என்று எல்லா விதமான உணர்சிகளையும் வாசம் நிறைந்த வண்ண மலர்கள் கலந்த பூ மாலையாகத் தொடுத்திருந்தார்.
கச்சி நகரில் போர் நடந்த கொடூரத்தை, நாட்டிய வடிவில், இசையின் துணையுடன், மிகவும் கச்சிதமாக அமைத்திருந்த விதம், அரண்மனை வேலையாட்களின் சின்ன சம்பாஷணை, பரிமாறல்கள், சங்கீர்ண ஜாதி தாளத்தில் நிபுணரான மகேந்திர பல்லவனை குறிக்கும் வண்ணம் நாட்டிய வடிவத்தில் ஒரு ஜதி பிரஸ்தாரம் என்று பலவகையான ரசமும் ருசியும் கலந்து வழங்கி இருந்தார்.
ஒரு நடனமணியின் கதை என்பதால் நாட்டியமும், இசையும் பின்னி நாட்டிய நாடக பாணியில் அமைத்து, அதன் மூலம் கதையை விளக்கிய விதம் மிகவும் அற்புதமாக இருந்தது. அப்பரின் பதிக்கங்களை கொண்டே, இசை அமைத்து, பாடியது, ஆடியது, கல்கியின் கதை அம்சத்தை, போக்கை அப்படியே வைத்து இயற்றியது குறிப்பிடத்தக்கது.
வசனம் ஆங்கிலத்தில் இருந்தாலும், அதை நுனி நாக்கில் இல்லாமல், அவரவர் இயல்பில் துல்லியமாக பேசியது நன்றாகவும் உண்மையாகவும் இருந்தது.
அன்றைக்கு நாட்டியம், இசை, நாடகம் என்ற மூன்று துறையும் சார்ந்த மூத்த கலைஞர்கள், தேர்ந்த கலைஞர்கள், வளரும் கலைஞர்கள் என்று பல ரகத்தினரும் ஒன்று சேர்ந்து, ஒரே குறிக்கோளுடன் நடத்திய இந்தப் படைப்பு கூட்டு முயற்சிக்கு என்றும் வெற்றி என்பதற்கு ஒரு நல்ல எடுத்து காட்டாக இருந்தது.
ஒரு மாபெரும் சரித்திர காவியக் கதையை, தமிழில் இருந்து ஆங்கிலப்படுத்தி, அதில் நாட்டிய இசை வடிவுகளைப் புகுத்தி, இரண்டு மணிநேரத்தில் நாடகத்தை சுவாரசியமாக நடத்தி, இளைய தலைமுறையினருக்குப் புரியும் வண்ணம் அமைத்து கொடுத்தது கெüரியின் சபதம் என்றே சொல்லலாம்.
இலக்கணம் மாறினாலும், இலக்கியம் மாறாது, மாற்றக்கூடாது என்பதை நன்றாக எடுத்து உரைத்திருக்கிறார் கெளரி.
Friday, July 9, 2010
Subscribe to:
Posts (Atom)